19 January 2018
RSS Facebook Twitter   

550x60

கருணாவும் படையினருமே எமது உறவுகளை கடத்தினர்!

Commission-to-Investigateகருணா குழுவினரால் கடத்தப்பட்டமை மற்றும் இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினரால் கடத்தப்பட்டமை தொடர்பில் காணமற்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை 6 பேர் சாட்சியமளித்துள்ளனர்.



அத்துடன் பத்துச் சாட்சிகள் வரையில் யாரால் தமது உறவுகள் கடத்தப்பட்டனர் என்பதை வெளிப்படுத்துவதற்கு தயக்கம் வெளியிட்டனர். ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமர்வின் போதே இவ்விதம் இடம்பெற்றுள்ளது.

குணநாயகி என்ற பெண் சாட்சியமளிக்கையில்:-
தனது மகன் கொழும்புக்குச் செல்வதற்காக காத்தான்குடிக்கு பேருந்துக்கு முன்பதிவு செய்யச் சென்றதாகவும் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்று தெரிவித்தார். இந்தச் சம்பவம் 2006 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்றதாக அவர் சாட்சியமளித்தார்.

இது தொடர்பில் ஆணைக்குழுவினர் எவ்வாறு காணாமற்போனார் என்று கேள்வியெழுப்பினர். அவரை வலுக் கட்டாயமாகக் கடத்திச் சென்றதாக அவர் குறிப்பிட்டார். யார் வலுக்கட்டாயமாக கடத்தினர் என்று ஆணைக்குழுவினர் மீளவும் கேள்வியெழுப்பிய போது, கருணா குழுவைச் சேர்ந்த சாந்தன் குழுவினரே அவரைக் கடத்தியதாகத் தெரிவித்தார்.

மற்றொரு பெண் சாட்சியமளிக்கையில்:-
1991 ஆம் ஆண்டு ஏறாவூருக்கு மீன் வியாபாரத்துக்குச் சென்ற எனது சகோதரர் இராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்டார். கொம்மாந்துறை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரே அவரைக் கடத்தியுள்ளனர். அதன் பின்னர் எனது சகோதரது நிலை தொடர்பில் எதுவித தகவலும் தெரியவில்லை என்று அவர் சாட்சியமளித்தார்.

பரமேஸ்வரி என்ற பெண் சாட்சியமளிக்கையில்:-
1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் திகதி எனது கணவரும், சகோதரரும் தோட்டத்தில் இரவுக் காவலிருந்த போது விசேட அதிரடிப்படையினரால் கடத்திச் செல்லப்பட்டனர் என்று கூறினார்.

எவ்வாறு விசேட அதிரடிப்படையினர் கடத்தினர் என்று குறிப்பிடுகின்றீர்கள் என்று ஆணைக் குழுவினர் கேள்வியெழுப்பிய போது, அந்தப் பகுதிக்கு விசேட அதிரடிப் படையினர் தான் சென்று வருவது வழமை. அத்துடன் அவர்கள் காவல் இருந்த தோட்டத்தில் விசேட அதிரடிப்படையினரின் சப்பாத்துக் கால் அடையாளங்கள் இருந்தன என்று பதிலளித்தார்.

இது தொடர்பில் விசேட அதிரடிப் படையினரின் முகாம்களில் சென்று கேட்ட போதும், அவர்கள் தாங்கள் எனது கணவரையும் சகோதரரையும் பிடிக்கவில்லை என்று மறுத்து விட்டதாக அவர் சாட்சியமளித்தார்.

அரசியல்