22 October 2018
RSS Facebook Twitter   

550x60

நிறைவேறாமல்போன மின்னல் ரங்காவின் நோக்கம்...

rang
இலங்கை அரசியல் வரலாற்றை தானே கரைத்துக்குடித்தவர் அல்லது இலங்கை அரசியல் தலைமையைத் தீர்மானிக்கும் கிங்மேக்கர் என்ற பல்வேறுபட்ட நாமங்களுடன் சக்தி ரீவியினுடைய மின்னல் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகின்ற நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயரட்ணம் ஸ்ரீரங்காவுடைய ஊடகவியலாளர் வரலாறு முட்பாதைகளைக் கொண்டது.

ஆரம்பத்தில் சிங்கள தமிழ் அரசியல்வாதிகளுடைய எடுபிடியாக தனது ஊடக மற்றும் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த ஸ்ரீரங்கா யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியினுடைய பழைய மாணவர்களுக்கே உரித்தான அடிப்படை குணாதிசயங்களில் ஒன்றாகிய கதைத்து வெல்லும் திறமையினையும், அரசியல்வாதிகளுடைய பலவீனங்களையும் வைத்துக்கொண்டு வெகுசீக்கிரமாக இலங்கை அரசியல் வரலாற்றில் இடம்பிடித்துக்கொண்டவர்.

மானிப்பாயை பிறப்பிடமாக கொண்ட இவர் ஏன் யாழ்ப்பாணத்தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெல்லவில்லை என்ற கேள்வி வாசகர்களாகிய உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் ஆரம்பத்தில் எழுந்துகொண்டது உண்மைதான்.

2009 ஆம் ஆண்டு போரின் முடிவுக்கு முன்பு சிங்களமக்கள் மத்தியிலும், தமிழ்மக்கள் மத்தியிலும் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்த மின்னல் நிகழ்ச்சி அதன்பிற்பாடு சற்று சாய்வுப்பாதையில் சென்றமை நிகழ்ச்சியினுடைய ஒருபக்கச்சார்பு அல்லது நிகழ்ச்சித்தொகுப்பாளருடைய பலவீனம் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டிருந்தது.

இதனைவிட மிகமுக்கியமான ஒருவிடயம் என்னவென்றால் விடுதலைப்புலிகளினுடைய அழிவிற்கு ரங்காவினுடைய மின்னல் நிகழ்ச்சியும் ஒரு காரணம் என அப்போது தமிழ்த்தலைவர்கள் பலர் பேசிக்கொண்டனர்.

தோட்டத் தொழிலாளர்களுடைய அடிப்படைப் பிரச்சினையை மின்னல் நிகழ்ச்சி மூலம் கொண்டுவந்தவர் ரங்கா என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளினுடைய இரட்டைவேடத்தன்மையினை மலையக மக்களிடையே கொண்டுவந்து வெற்றிவாகை சூடிய யாழ்ப்பாணத்தமிழனாக ரங்கா திகழ்கிறார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலே மனோகணேசன் மலையகத்தில் தோல்வியடைவதற்கு ரங்காவினுடைய பங்கு அளப்பரியது.

ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினுடைய தீவிர ஆதரவாளராகக் காட்டிக்கொண்ட ரங்கா எப்போதும் மூழ்கும் கப்பலில் ஏறுவதில்லையென்ற அவரின் கொள்கைப்பிடிப்புக் காரணமாக மஹிந்த சிந்தனை பால் ஈர்க்கப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் ஐக்கியமானார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் ஆகியோருடைய மின்னல் நிகழ்ச்சிகள் அவர்களுடைய படுகொலைக்குப்பிறகு நீண்டவாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் தான் வெல்லமுடியாதென்பது ரங்காவிற்குத் தெரியும்.

இதன் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு வன்னியில் கால் ஊன்ற வந்த ரங்காவிற்கு ரிசாத் பதியுதீன் பூரண எதிர்ப்புக்காட்டித் துரத்தியது எல்லோருக்கும் தெரியும்.

விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தனக்கு இடம் கிடைத்திருக்கும். அதன்மூலம் தனது அமைச்சர் பதவியென்ற கனவை நனவாக்கிக் கொள்ளலாம் என்ற திட்டத்துடன் இருந்த ரங்காவிற்கு விடுதலைப்புலிகள் இந்தவிடயத்தில் பச்சைக்கொடி காட்டவில்லை.

தற்சமயம் ரங்காவின் பிரஜைகள் முன்னணி என்ற அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் எல்லாம் ரங்காதான். அது ரங்கா முன்னணி.

தற்சமயம் ரங்காவினுடைய பிரதான நோக்கம் தான் கேட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தனக்கோர் இடம்தராத இந்தக் கூட்டமைப்பினை மின்னல் நிகழ்ச்சியூடாக மானபங்கப்படுத்தி அவர்களுடைய இயலாத்தன்மையினை மக்களுக்குத் தோலுரித்துக்காட்டி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அதனை உடைத்து சுக்குநூறாக்குவதுதான்.

இதன்மூலம் மஹிந்த, ரணில் ஆகியோருடைய நீண்டநாள் ஆசையினை நிறைவேற்றி தனக்கே உரித்தான பாணியில் இதுவும் ரங்கா பொலிரிக்ஸ் எனக் கூறுவதுதான்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒருகுடைக்கீழ் இருந்த முஸ்லிம் வாக்காளர்கள் தற்சமயம் பிரிந்து ரணில், மைத்திரி ஆகியோரை ஆதரித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
இதற்குக்காரணம் மின்னல் நிகழ்ச்சியில் தோன்றிமறைந்த அரசியல் அனுபவமற்ற முஸ்லிம் தலைவர்கள்.
கடந்த சில மின்னல் நிகழ்ச்சிகளை உற்று நோக்கினால் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறிய கருத்துக்கள் பல ஒரு ஒற்றுமையின்மையை அவர்களிடையே தோற்றுவித்திருக்கின்றது.

திரு.சம்பந்தன் பங்குபற்றிய மின்னல் நிகழ்ச்சியில் அவருக்கே தெரியாமல் ரங்கா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இயலாத்தன்மையை கோடிட்டுக் காட்டியுள்ளார்.

மாவை சேனாதிராசா பங்கு பற்றிய மின்னல் நிகழ்ச்சியில் 50 வீதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்வீட்டு இரகசியங்கள் மக்கள் மயப்படுத்தப்பட்டன.

ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோக்கமராக்கள், கண்ணைப்பளிச்சிடும் மின்விளக்குகளிற்கு முன்னால் தங்களை கதாநாயகர்கள் என நினைத்துவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை ரங்கா நகைச்சுவை நடிகர்களாக்கி, தான் கதாநாயகர் வேடம் பூண்டு கொண்டார்.

இதற்கு அவருக்கு சம்பூர் காணிவிவகாரம், புங்குடுதீவு வித்தியா கொலை, வலிவடக்கு காணிப்பிரச்சினை ஆகியன கைகொடுத்துதவின.

மின்னல் நிகழ்ச்சியில் கடந்தவாரம் டக்ளஸ் தேவானந்தா - சுமந்திரன் இருவரையும் வைத்து ஒரு அரசியல் திரைப்படத்தை எடுக்க முயன்ற ரங்கா தனது நோக்கம் நிறைவேறாமல் தோற்றுப்போனதை மின்னல் வாசகர்கள் கண்டு களித்தனர்.

டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் திறமை, வாதிடும் வல்லமை ஆகியவற்றின் முன்னால் சுமந்திரன் நாகரீகமாக பலவிடயங்களை ஒப்புக்கொண்டார். இருவரும் தாங்களே அரசியல் பேசிக்கொண்டார்கள். ரங்காவை கதைப்பதற்கு அனுமதிக்கவில்லை.

இருவரும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற விடயத்தை ஏகமனதாக ஏற்றுக்கொண்டவுடன், ரங்காவிற்கு திகைப்பு ஏற்பட்டது. உடனடியாக நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியில் வடக்கு கிழக்கு இணைப்பு என்ற விடயத்தை ரங்கா கையில் எடுக்க அதற்கும் டக்ளஸ் சரியான முறையில் பதிலளித்தார்.

தமிழ்த்தலைவர்களைப்பிரித்து தமிழர் தாயகத்தில் சிங்களக்கட்சிகளை வேரூன்ற வைக்கின்ற ரங்காவினுடைய முயற்சிக்கு டக்ளஸ் காட்டிய எதிர்ப்பினைக்கூட மின்னல் நிகழ்ச்சியில் மாவை, சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் காட்டவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் விசனமடைந்துள்ளனர்.

எது எவ்வாறிருப்பினும் பழைய மோந்தையில் புதிய கள் என்பது போல மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி, வடக்கு கிழக்கு இணைப்பு என்பதனை தமிழ்த் தலைவர்கள் ஏற்றுக்கொண்டது தமிழ் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியாக இருந்தாலும், இதனைப்பல வருடங்களுக்கு முதலே ஏற்றிருந்தால் முள்ளிவாய்க்கால் துயரம் ஏற்பட்டிருக்ககுமா? என முன்னாள் புலிகள் பெருமூச்சுவிடுகிறார்கள்.

இதன்மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் புதிய சில கட்சிகளும் இணைக்கூடிய வாய்ப்புள்ளது. இதனால் எந்த தேர்தல் முறையென்றாலும் அனைத்துத் தொகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றிவாகை சூடுவது உறுதியாகும்.

எத்தனையோ வாய்ப்புக்களை தமிழ்த்தலைவர்கள்; நழுவவிட்டாலும் தற்போது அருமையான வாய்ப்புக்கிடைத்திருக்கிறது. அனைவரும் ஒன்றுசேர்ந்து மக்கள் விரும்புகின்ற ஜனநாயகக்கட்டமைப்பை உருவாக்கி சிங்களத்தலைவர்களுக்கு சவால் விடுகின்ற நேரம் வந்துவிட்டது. இதற்கு ரங்கா போன்றவர்களுக்கு மின்னல் நிகழ்ச்சியில் இருட்டடி கொடுப்பதில் தமிழ்த்தலைவர்கள் ஒற்றுமையைப் பேணவேண்டும். இல்லாவிட்டால் முஸ்லிம்களுக்கும், மலையகத்தமிழர்களுக்கும் ஏற்பட்ட கதிதான் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கும் ஏற்படும் என்பது உறுதி.

வீரபாண்டிய கட்டப்பொம்மன்

கட்டுரை